Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, April 25, 2012



காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.

எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன.

அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதிகளை உட்கொண்டு உற்சாகமாக இருந்ததால், மோக்கா எனப்படுகிறது. அது தற்போது காஃபியுடன் தவிர்க்க இயலாத சொல்லாகி விட்டது. 'கஃபே கேன்ஸ்' எனப்படும் காஃபிக் கடைகள் முதன்முதலில் புனித நகரமான மெக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அரேபியா நாட்டின் சதுரங்கம் விளையாடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எப்போதுமே மகிழ்ச்சியில் களைக்கட்டி கொண்டிருக்கும் பிரபலமான இடங்களில் காஃபியின் இனிமை வேகமாக பரவியதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காஃபி விற்பனையாகும் கடைகள் புது வளர்ச்சியும், தனித்தன்மையையும் அடைந்தன.

அதன்பிறகு டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாடுகளின் காலனிகளின் மூலமும் மற்ற இடங்களுக்கும் காஃபியின் மகத்துவம் பரவ ஆரம்பித்தது. 1683 ஆம் ஆண்டு வெனிஸ் நகரின் பிரபல பியாசா சான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில்தான் முதன்முதலாக ஈரோப்பியன் காஃபி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அந்த இடம் காஃபிக்கு பெயர்பெற்ற இடமாகவே உள்ளது.

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு சந்தையான, லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனமே ஒரு காஃபி கடையாகவே முதலில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1688 ஆம் ஆண்டு எட்வர்ட் லாயிட்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யும் கப்பல்களின் பட்டியல்களை தயாரிப்பது இவரது பணியாகும். 1668 ஆம் ஆண்டில் தான் தென் அமெரிக்க மக்களால் காஃபி சுவைக்கப்பட்டது.

1773 ஆம் ஆண்டு போஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன் எனப்படும் காஃபி அவுஸில்தான் திட்டமிடப்பட்டது. இன்று நிதி மாவட்டம் என்றழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள காஃபி கடைகளில்தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும், பேங்க் ஆஃப் நியூயார்க்கும் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

1720 - ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தென் அமெரிக்காவில் காஃபி பயிரிடப்பட்ட நிகழ்ச்சி, காஃபி வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். 60 வேறுபட்ட நாடுகளில், பெரும்பாலும் வளரும் நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்பட்டாலும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் காஃபி அதிகளவில் அருந்தப்படுகிறது.

காஃபியை மிக அதிகமாக தயாரிக்கும் நாடு பிரேசில், காஃபிக்கு மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா. காஃபியின் தலைசிறந்த ஆறு தயாரிப்பாளர்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

பார்த்தவர்கள்

மொழி மாற்றம்

- Copyright © Do You Know...? -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -