Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, April 25, 2012


உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு என சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கு நஞ்சு என்று சொல்ல வருவது விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கும் பூச்சிமருந்துகள் (insecticide), பூஞ்சண கொல்லிகள் (Fungicide) பற்றியல்ல. இது இயற்கையாகவே உருளைக்கிழங்கு மற்றும் அதனோடு இணைந்த குடும்பத்தை சேர்ந்த தாவரங்களான தக்காளி, கத்தரி, புகையிலை போன்ற தாவர இனங்கள் தம்மை தாக்கும் பூச்சி பீடைகளில் இருந்தும் நோயை ஏற்படுத்தும் பூஞ்சண இனங்களில் இருந்தும் பாதுகாத்துகொள்ள உருவாக்கும் இயற்கையான பாதுகாப்புச்செயன்முறை.

உருளைகிழங்கு தாவரம் தன்னை பாதுக்காக்க உருவாக்கும் நச்சு பதார்த்ததின் பெயர் சொலானின் (Solanine) எனும் ஒரு கிளைக்கோஅல்கலோயிட்(Glycoalkaloid).

மனிதருக்கு நோயை ஏற்படுத்த மிகச்சிறிய அளவு சொலானின் போதுமானது. 2-5 மில்லிகிராம்/கிலோகிராம் உடல் நிறை எனும் அளவு சொலானின் மனிதரில் நோய் ஏற்படுத்த போதுமானது.
மிக அதிக அளவில் உள்ளெடுக்கப்பட்டால் மரணமும் சம்பவிக்கலாம்.

சொலானினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்: சமிபாட்டு தொகுதி, நரம்பு தொகுதி.

நோய் அரும்பு காலம்: 8-12 மணி நேரம். சில நேரங்களில் 30 நிமிடத்தில் கூட அறிகுறிகள் வெளித்தெரியலாம்.

அறிகுறிகள்:
மயக்கம், அல்லது nausea
வயிற்று போக்கு- diarrhea,
வாந்தி- vomiting,
வயிற்று உபாதை- stomach cramps,
தொண்டை எரிவு- burning of the throat,
heart arrhythmia,
தலைவலி -headache
dizziness


உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது சொலானின் அதிக அளவில் உருவாகிறது. இது இயற்கையாக மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு மண்ணுக்கு வெளியே கொண்டுவரப்படும் போது கிழங்கை உண்ணும் பூச்சிகள், நோய் ஏற்படுத்தும் பூஞ்சணங்களை எதிர்க்க உருளைகிழங்கு மேற்கொள்ளும் வழிமுறை. அத்துடன் பூஞ்சண தொற்று நோய்கள் உருளை கிழங்கு பயிரையோ அல்லது உருளை கிழங்கையோ தாக்கும் போது சொலானின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

எப்படி நாம் சொலானின் நச்சுபொருள் இருக்கும் உருளை கிழங்கை அறிவது:

பொதுவாக உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு, அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் பொது அதன் மேற்பரப்பு பச்சை நிறமாக மாறும். இது சாதாரணமாக இலைகள், தண்டுகள் போன்றவை கொண்டுள்ள பச்சயம் (chlorophyll) எனும் ஒளித்தொகுப்பிற்கு (photosynthesis) உதவும் ஒரு நஞ்சற்ற, ஒரு பதார்த்தம். பச்சயம் (chlorophyll) உருவாகும் செயன்முறைக்கு சமாந்தரமாக சொலானின் எனும் நஞ்சு பொருள் உருவாக்கமும் நடைபெறும். ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்த செயன்முறையல்ல. உருளைகிழங்கு அதிக அளவில் பச்சை நிறமாக இருக்கிறது என்றால் அங்கு சொலானின் என்ற நச்சு பொருளும் அதிக அளவில் இருக்க்கிறது என்றே அர்த்தமாகும். அத்துடன் சொலானின் கொண்ட உருளை கிழங்கு கசப்புச்சுவையை கொடுக்கும். அதே போல உருளை கிழங்கு முளைக்க ஆரம்பிக்கும் போதும் சொலானின் அளவு அதிகரிக்கும்.

சொலானின் நச்சுபொருள் பொதுவாக நீரில் அவிக்கும் போது அழிவடையாது உருளைகிழங்கில் இருக்கும். எனவே சமைத்த உருளைகிழங்கு கூட பாதுகாப்பானதல்ல.
முழுமையாக எண்ணேயில் மூழ்க செய்து பொரிக்கும் முறையில் சொலானின் அளவு குறைவடையலாம்.

சொலானின் உள்ள உருளை கிழங்கை எப்படி சமைப்பது?

உருளை கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்த பின் உருளை கிழங்கை அவதானித்து பார்க்கவும்.

உருளை கிழங்கு பச்சை நிறமாக இருந்தால் பச்சை நிறம் எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவு பகுதியினுடைய மேல் தோல், மற்றும் கிழங்கின் உள்ளே பச்சை நிறம் பரவியிருக்க கூடிய பகுதிகள் அனைத்தையும் வெட்டி அகற்றி பின் சமைக்கவும்.


ஒவ்வாமை (allergy) இருப்பவர்கள் இப்படியான பச்சை நிறமான உருளை கிழங்கை சமைப்பதை தவிர்ப்பது நல்லது.

வீடுகளில் உருளை கிழங்கை ஒளிபடாது பாதுகாத்துவைப்பது அவசியம்.

பூசண தொற்று ஏற்பட்ட உருளை கிழங்கை சமைப்பதை தவிர்த்தல்: சில நேரம் பூசண தொற்று ஏற்பட்டு அழுகிய பகுதியை வெட்டி அகற்றி மிகுதியை சமைப்பவர்கள் அதை முழுமைக்க தவிர்க்க வேண்டும்.

முளைத்த/ முளைஅரும்பிய உருளைகிழங்கை சமைப்பதை தவிர்த்தல்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

பார்த்தவர்கள்

மொழி மாற்றம்

- Copyright © Do You Know...? -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -