Posted by : ஆனந்த் சதாசிவம் Friday, February 24, 2012



   நமது இணையதளத்தில் சில அரசியல் மற்றும் மத நிகழ்வுகளை பேசிய போது மொகலாய மன்னன் ஒளரங்கசீப்பை ஆதிக்க வெறி பிடித்த  அரை கிறுக்கன் என்ற வார்த்தைகளால் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதை  படித்த சிலர் ஒளரங்க சீப்பை அப்படி அழைப்பது தவறு,  அவர் மிகவும் நல்லவர்,  பல முஸ்லீம் மக்களால் மதிக்கப்படும் மாமன்னர் என்றெல்லாம் எனக்கு விளக்கம் சொன்னார்கள். இன்னும் சிலரோ ஒளரங்சீப்பை பற்றிய அடிப்படை வரலாற்று ஞானம் இல்லாமல் நீங்கள் எழுதுகிறிர்கள், அதை மாற்றி கொள்ளுங்கள் என இடித்துரைக்கவும் செய்தார்கள்.  வேறு சிலரோ நீ காவி படையை சேர்ந்தவன்,  முஸ்லீம்கள் மீதுள்ள வெறுப்பை ஒளரங்கசீப் மீது காட்டுகிறாய் என்று கடினமாகவும் பேசினார்கள்.

    இவர்களின் கருத்துக்களையும், பேச்சுக்களையும் மிக கவனமாக கவனித்து பார்க்கு போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தென்பட்டது.  உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள முஸ்லீம்களிலும் சிலர் உணர்ச்சி பூர்வமாக செயல்பட கூடியவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் ஒளரங்கசீப்பை பற்றி ஒருவர் குறையாக சொன்னால் அந்த மன்னனின் நல்ல இயல்புகளையும் அவனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் எடுத்து சொல்லி கருத்துக்களை பதிய வேண்டும்.  அதை விட்டுவிட்டு அவனை நல்லவன் என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் எப்படி குறை கூறலாம் என்பது முழுக்க முழுக்க கருத்து சுகந்திரத்திற்கு எதிரானதாகும்.  ஒரு தனிப்பட்ட மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலத்தில் கொண்டு வந்து விவாதம் செய்வது நாகரீக சமூகத்தில் நடைபெற கூடாத செயலாகும்.  அதே தனிமனிதன் பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்வனாக இருந்தால் அவனது ஒவ்வொரு செயலும் அது அகச்செயலாக இருந்தாலும் புறசெயலாக இருந்தாலும் நாலுபேர் விமர்சிப்பதை யாரும் குறை கூற முடியாது.


   தற்கால அரசியல்வாதிகளின் மிக சிறந்தவர் என கருதப்படுகின்ற பெருதலைவர் காமராஜர், அவர்களையே அவர் வாழ்ந்த காலத்தில் மேடைகள் போட்டும் பத்திக்கைகளில் எழுதியும் இன்றைய தலைவர்கள் பலர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.  ஆசிய ஜோதி என்று சர்வதேச தலைவர்களால் போற்றப்படுகின்ற பண்டிட் ஜவகர்லால்  நேருவை இன்று வரை கூட அவர் காஷ்மீர் விவசாரத்தில்  நடந்து கொண்ட விதத்திற்காகவும் சீன படையெடுப்புக்கு முன்பே தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும் பலர் விமர்சிக்கிறார்கள்.  இந்த விஷயங்களில் மட்டும் நேரு தலை உருளவில்லை. மவுன்பேட்டன் பிரபுவின் மனைவி விவகாரத்தில் கூட நேருவின் அந்தரங்க வாழ்க்கை கேடானது என்றும் விமர்சிக்கப்படுகிறது.  அவ்வளவு தூரம் ஏன் போவானேன்.  நமது தேச தந்தை மகாத்மா காந்தி கூட விமர்சன கணைகளிலிருந்து தப்பவில்லை.  எனவே பொது வாழ்க்கையில் இருப்பவர்களை விமர்சிக்கும் பழக்கத்தை மனித சமூகம் தொன்று தொட்டே செய்து வருகிறது.  ஆனால் அந்த விமர்சனம் என்பது உண்மையை சுட்டிகாட்டி திருத்தும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் அறுவெறுக்கும் வண்ணம் இருக்ககூடாது.

   ஒளரங்சீப் மன்னன் காலமாகி பல நூற்றாண்டாகி விட்டது.  மெகாலாய சாம்ராஜ்ஜியம் என்பது அழிந்து மண்மேடாகியும் விட்டது.  ஆனால் ஒளரங்க சீப் விததைத்த தன் மதம்தான் சிறந்தது மற்ற மதங்கள் எல்லாம் கீழ்தரமானது என்ற விஷ விதை இன்றைய காலகட்டத்தில் கூட சிலர் மனிதர்களிடம் தலைதூக்கும் போது அல்லது அவனை உதாரணம் காட்டி அவன் அப்படியெல்லாம் கொடுமையாக நடந்து கொண்டான். அதனால் முஸ்லீம்களை பலாத்காரம் செய்வது தவறல்ல என்று மற்ற மதவெறியர்கள் பேசும் போது அதற்கெல்லாம் காரணமான ஆதிக்க வெறிபிடித்த ஒளரங்சீப்பை தோண்டி எடுத்து சாட்டையால் அடிக்க தோன்றுவது இயற்கையான மனோபாவம்.

    ஒளரங்கசீப் கூர்-ஆனின் கட்டளைபடி ஐந்து வேளை தொழுதான்.  மது மற்றும் போதை பொருட்களை கண்களால் கூட தொடமறுத்தான்.  தனது இன்ப வெறிக்காக எந்த பெண்ணையும் அவன் பலாத்காரம் செய்தது கிடையாது.  அரசனாக இருந்தாலும் ஆடம்பர பொருட்கள் எதையும் உபயோகப்படுத்துவதை அவன் விரும்பவில்லை.  பளபளவென்ற பட்டாடையை கூட அவன் அணிந்தது இல்லை.அரண்மையின் மேல் மாடத்தில் நின்று தினசரி காலை வேளைகளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்லும் ஆண்டான் அடிமை பழக்கத்தையும் கட்டோடு ஒழித்தான்.  


   அரசாங்கத்தின் வருகின்ற வருவாயில் ஒரு சல்லி காசை கூட தன் சொந்த செலவுக்கு எடுத்தது கிடையாது. சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட இஸ்லாமியர்கள் தலையில் அணியும் குல்லாவை செய்து விற்பனைக்கு அனுப்பியே தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டான்.  தனிமனித ஒழுக்கத்திற்காக கூர்-ஆன் என்னென்ன கட்டளைகள் போட்டு இருக்கிறதோ அத்தனையும் ஒன்றுவிடாமல் அவன் கடைபிடித்தான். அதனால் அவனை நல்ல முஷல்மான் என்று சொல்லலாம்.  அதற்காக அந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவனை சிறந்த அரசன் என்றோ,  மிக சிறந்த மனிதன் என்றோ சொல்ல முடியாது. அப்படி சொல்ல வேண்டும் என்று யாராவது எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளை தனமானது.

    அரசியல் என்று வந்துவிட்டாலே அதில் சூதும்,  சதிகளும் நிறைந்திருக்கும் என்று நமக்கு தெரியும்.  இக்கால அரசியல் போலவே தான் அக்காலத்திலும் பல தகிடுதித்தங்கள் நடந்தது உண்டு அதனால் தான் எந்த அரசியல்வாதியும் தன்னை உத்தமன் என்று பகிரங்கமாக சொன்னால் கூட உள்ளுக்குள் தன் கூற்றை தானே நம்புவதில்லை.  அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை கூட ஒப்பந்தம் உறுதிமொழி என்று வந்துவிட்டால் அதை மீறுவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள்.  ஆனால் ஒளரங்கசீப்பின் அரசியல் வாழ்க்கையில் ஒப்பந்தம் என்பதெல்லாம் எதிராளியை தாக்குவதற்கு எடுத்து கொள்ளும் அவகாசங்கள் தான்.

    ஒளரங்க சீப் தனது மூத்த சகோதரன் முராதுவோடு 1657-ம் வருடம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஆமதபாத் நகரில் ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டான்.  ஒளரங்க சிப் சிறந்த முஸ்லீம் அல்லவா? அதனால் அந்த ஒப்பந்தம் அல்லாவின் பெயராலும்,  நபிகள் நாயகத்தின் பெயராலும் ஆணையிட்டு துவங்கி இரு சகோதர்களும் சமமாக தேசத்தை பிரித்து கொள்வதாக உறுதி கூறுகிறது. கடவுளின் பெயரில் வைத்த ஆணையை மீற கூடாது என்று ஒரு சாதாரண மனிதன் கூட சத்தியத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த வரை போராடுவான்.

     ஆனால் இறைவழி நடப்பது தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என ஊரெல்லாம் விளம்பரபடுத்தி கொண்ட ஒளரங்க சீப் அந்த ஒப்பந்தத்தை இரண்டே ஆண்டுகளில் மீறினான் தனது சொந்த சகோதரனையே அன்பு என்ற நயவஞ்சக வலையை விரித்து கொலை செய்தான்.  முராதுவை கொன்றது போலவே தனது மற்ற இரு சகோதர்களையும் கொலை செய்த ஒளரங்க சீப்பின் கருணை மனோபாவத்திற்கு இன்னம் ஒரு அழகான எடுத்துகாட்டு சரித்திரத்தில் அழியாமல் இருக்கிறது. 

   ஒளரங்க சீப்பின் இன்னொரு சகோதரர் தாரா  இவரும் இறக்கத்தின் சிகரமான ஒளரங்க சீப்பால் கொல்லப்பட்டவர் என்றாலும் இவரது அழகான மகன் சுலைமான் கொல்லப்பட்ட விதம் மிக கொடூரமானது.   தனது தந்தையார் சாகடிக்கப்பட்ட பிறகு உயிரை காப்பாற்றி கொள்ள கர்வால் மலை பகுதியிலுள்ள இந்து அரசர் ஒருவரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார் ஆனால் சில கை கூலிகள் அவரை காட்டி கொடுத்து விட்டதினால் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு ஒளரங்கள சீப் முன்னால் நிறுத்தப்பட்டார்.  

    மாமன்னர் ஒளரங்க சீப் தனது பதவிக்கு போட்டியாக சுலைமான் வந்துவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இருபத்தைந்து வயது கூட பூர்த்தியாகாத இளவரசருக்கு மரண தண்டனை விதித்தார். கொல்வதென்றால் உடனடியாக கொன்று விடுங்கள்.  சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.  ஆகட்டும் என்று அரசரும் தலையசைத்து கொண்டார்.  தனது அண்ணன் மகனை எப்படி கொன்றார். தெரியுமா?  பௌஸ்தா என்ற போதை பானத்தில் அபின் கலந்து கொடுத்து ஒவ்வொரு அங்கங்களையும் சிறிது சிறிதாக வெட்டி நாற்பது நாளுக்கு மேல் சித்ரவதை செய்து வலியே இல்லாமல் (?) துடிதுடிக்க கொன்றார் இதுதான் ஒளரங்க சீப்பின் கருணை மனதின் உண்மை லட்சணம்.


   பங்காளி சண்டையில் குத்து வெட்டு என்பது சகஜமானது தானே,  அதுவும் அரச பதவிக்கான போராட்டம் என்றால் கொடுமையும் கொடூரமும் சற்று அதிகமாக இருக்கும்.  அதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு ஒரு அரசனை மதிப்பிட்டு விட முடியுமா?  என்று சிலர் நினைக்கலாம்.  நிச்சயம் இது நியாயமான சிந்தனை இல்லையென்றாலும்  யதார்த்தமானது தான்.
   அரசனாயிருக்கட்டும். சாதாரண குடிமகனாக இருக்கட்டும் மனித நேயம் மனித பண்பு என்பவைகள் சிறிது கூட இல்லாத ஒருவனை மனிதன் என்ற கணக்கில் சேர்த்து கொள்வதே பெரிய தவறு.

    ஒளரங்க சீப்பை உண்மையான முஸ்லீம் என்று சில சாதாரண மனிதர்களும் சில அறிஞர்களும் கருதுகிறார்கள்.  அப்படி அவனை உயர்வாக எண்ணுவதற்கு அவர்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் திரு கூர்-ஆன் இரண்டாவது அத்தியாயம்.  எண்பத்தி மூணாவது சூரா உங்களுடைய பெற்றோர்கள்,  உறவினர்கள், அனாதைகள்,  மிஸ்கீன் என்ற வறியவர்கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்,  மனிதரிடம் நல்லவற்றை பேசுங்கள் என்று சொல்கிறது.  கூர்-ஆன் வழிலிருந்து சற்றும் தவறாதவன் என்று சொல்லப்படும் ஒளரங்கசீப் கூர்-ஆனின் இந்த கட்டளைக்கு கொடுத்த மரியாதை உலகறிந்தது.  ஆம் பெற்ற தந்தையையே சிறையில் அடைத்து துன்பபடுத்தி மனதால் துடிக்கவிட்டு மவுனமாக அழ வைத்து அதை ரசித்த வண்ணம் கூர்-ஆன் படித்தான்.


    சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளை தவிர அரசியல் கைதிகளுக்கு சில சலுகைகள் அந்த காலத்திலும் உண்டு.  இந்த காலத்திலும் அது தொடர்கிறது.  அதுவும் அரசு நிர்வாகத்தில் பெரிய பதவிகளில் இருந்தவர்களுக்கு அவர்கள் பணி காலத்தில் மக்கள் சேவையாற்றியதை கருத்தில் கொண்டு அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் அதிகம் துன்பம் கொடுப்பது  கிடையாது.

    ஷாஜகான் ஒளரங்கசீப்பின் தந்தை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  முதலில் அவன் மெகலாய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி எல்லாதரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்ட நல்ல நிர்வாகி,  சகல கலைகளிலும் ஆர்வமுடைய மேதை.  அப்படிப்பட்ட ஒரு சக்கரவர்த்தியை சிறையிலடைத்த ஒளரங்கசீப் எண்ணிலடங்காத கொடுமைகள் செய்தான். ஆக்ரா கோட்டைக்குள் இருந்த ஷாஜகானின் சிறைசாலைக்கு யமுனா நதியிலிருந்து குடிநீர் விநியேகம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டான். கோடைகாலத்து கடும் வெய்யிலை தாங்க முடியாத முதிவரான ஷாஜகான் கோட்டைக்குள் கிடைத்த உப்பு தண்ணிரையே குடிநீராக பயன்படுததினார்.  இதை பற்றி ஷாஜகான் கைப்பட எழுதிய ஒரு கடித ஆதாரம் இன்னும் இருக்கிறது.

   ஒளரங்கசீப்பிற்கு மன்னர் ஷாஜகான் எழுதிய கடிதம் இதுதான்.  நமது நாட்டிலுள்ள இந்துக்கள் இறந்து போன முன்னோர்களுக்கு கூட தண்ணீர் கொடுத்து சடங்கு செய்வார்கள் என் மகனான நீயோ விந்தையான முஸ்லீம்மாய் இருக்கிறாய்.  உயிரோடு இருக்கும் தகப்பனுக்கு குடிக்க தண்ணிர் கூட கொடுக்காமல் தவிக்கவிட்டு இருக்கிறாய்.  இதை படிக்கும் போது ஒளரங்கசீப் உண்மையான முஸ்லீம் என்பதை எப்படி ஏற்க?

    சிம்மாசனத்தை அடைய கொடுமைகள் செய்தது ஒளரங்கசீப் மட்டும் தானா? மற்ற மன்னர்கள் யாரும் கொடுமைகளே செய்தது இல்லையா? என்ற கேள்வி பலருக்கு எழும். ஒளரங்க சீப்பிற்கு முன்பு இருந்த அல்லது மொகலாய வம்சத்தாருக்கு முன்னோடிகளான தைமூர்கள் கையாளாத சதி திட்டஙகளா? அல்லது கொடுமைகளா?  அவர்கள் செய்ததைதான் இவனும்  செய்தான், என்று சிலர் கேட்க கூடும். அண்ணனை கொன்றது.  தகப்பனை சிறையில் அடைத்தது அவர்களின் சொந்த குடும்ப விஷயம்.  அது எக்கேடாவது கெட்டு ஒழியட்டும்.  மக்கள் ஒளரங்க சீப்பால் அடைந்த நன்மை என்ன?  அப்படி எதாவது இருக்கிறதா? என்று பூத கண்ணாடி போட்டு தேடி பார்த்தாலும் கூட ஒரு கூழாங்கல் அளவு கூட நன்மை என்று எதுவும் கிடைக்கவில்லை.

    ஒளரங்கசீப்பிற்கு ஒரு மாபெரும் நல்ல எண்ணம் இருந்தது.  தான் அரசாளும் போது தன்னை சுற்றி எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்னஞ் சிறிய நிலத்துண்டை கூட இந்து மன்னர்கள் யாரும் அரசாள கூடாது. அப்படி அரசாளுவது கடவுளுக்கு எதிரான மாபெரும் குற்றமென அவன் கருதினான். 


   அண்டை நாட்டு அரசர்களே மாற்று மதத்தினராக இருப்பதை பொறுத்து கொள்ள முடியாத அவனால் தன் சொந்தநாட்டு மக்கள் வேற்று மதத்தை பின்பற்றுவதை சகித்து கொள்ள முடியுமா?  நாட்டு மக்கள் அனைவருமே இஸ்லாமியர்களாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.
    அதற்காக சிலருக்கு பதவிகளை கொடுத்து கவர்ந்து இழுத்தான்.  செல்வத்தையும் வாரி கொடுத்தான். பணத்திற்கும்,  பதவிக்கும் மயங்காதவர்களை சிறையிலும் தள்ளி கொடுமை படுத்தினான்.  சிறை கொடுமையும் தாங்கிகொண்டு மதமாற மறுத்தவர்களை ஆசை தீர கொலை செய்தான். எத்தனை பேர்களை தான் கொலை செய்வது.  கொலை செய்வதற்கென்றே வேலைக்கு ஆள் வைத்து சம்பளம் கொடுத்து பணத்தை வீணடிக்க வேண்டி இருக்கிறதே என்று வருத்தப்பட்ட ஒளரங்கசீப் நாட்டு சிக்கனம் கருதி கில்ஜி வம்சத்தாரும் அடிமை வம்சத்தாரும் இந்துக்கள் மேல் போட்ட ஜிஸியா என்ற வரி விதிப்பை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தான்.

   அதாவது இந்து மக்கள் தான் பிறந்த சொந்த நாட்டிலேயே தன் விருப்பபடி வழிபாடு நடத்த வருடம் தோறும் அரசாங்கத்திற்கு வரிகட்ட வேண்டும்.  அப்படி வரிகட்ட முடியாத யாருக்கும் இந்துவாக வாழ உரிமையில்லை.  ஒன்று அவன் இஸ்லாமியனாக மாறியாக வேண்டும். அல்லது மரணத்தை ஏற்று கொள்ளவேண்டும்.  


    எத்தனை உயர்ந்த பண்பு ஒளரங்க சீப்பிடம் இருந்திருந்தால் அவன் இத்தனை தயாளத்துடன் நடந்து கொண்டு இருக்க முடியும்.  இவைகள் எல்லாம் ஓளரங்கசீப் கொடூரமானவன் என்பதிற்கு சான்றாக இருக்கும்.  மிகச்சிறிய விஷயங்கள்.  மற்ற பெரிய விஷயங்களை எழுதுவதென்றால் காகிதமும் பேனாவும் அந்த கொடுமைகளை சகிக்க முடியாமல் தூக்கு மரத்தில் தொங்கிவிடும்.  ஒரு மனிதன் கொடுமைகாரணாக மட்டுமிருந்தால் அவனை திருத்தலாம் அவனே பைத்தியகாரனாக இருந்தால் என்ன செய்ய முடியும்.

    இஸ்லாமிய கொள்கைப்படி சங்கீதம் நாட்டியம் என்பவைகள் சாத்தானின் செயல்களாம் சிற்பம், ஒவியம் என்பது கூடவே கூடதாம்.  இதற்காக அந்த பைத்தியகாரன் என்ன செய்தான் தெரியுமா? நாட்டிலுள்ள இசைவானர்களையும், நாட்டியகாரர்களையும் நாட்டைவிட்டே ஒடும்படி கட்டளையிட்டான்.  மறுத்துவர்களை கும்பலாக ஒரே இடத்தில் கூட்டி நெருப்பு வைத்து கொளுத்தி  சாகடித்தான். இவன் காலத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு கலை பொக்கிஷம் பதாவா-இ-ஆலம்கீ என்ற நூல்தான்.  இந்த நூல் எதைப்பற்றி பேசுகிறது என்று தெரிந்து கொண்டால் ஒளரங்கசீப் மேதமைக்கு,  கலைசேவைக்கு ஆயிரம் பாரத ரத்னா விருதுகள் வழங்கலாம். சரி அதில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று யாரும் மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம்.  மக்கள் நடந்து கொள்ள வேண்டிய இஸ்லாமிய சட்டங்கள் என்பது தான் அந்த புத்தகத்திலுள்ள சரக்கு.


    இந்து ஆலயங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகள், கலை கலாச்சார விழாக்கள் எல்லாம் தடை செய்ப்பட்டன.  சாமி ஊர்வலம் கூட வர கூடாது. ஏன் என்றால் அதில் மேளதாளம் இருக்கிறதாம். இந்த சட்டங்கள் எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான். அவன் அரசவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாரசீக நாட்டிலிருந்தும், பாக்தாத் நகரிலிருந்தும் ஏராளமான இசைவானர்களையும் நாட்டிய தாரகைகளையும் வரவழைத்து அந்தப்புறங்களில் கண்டு ரசித்தனர் குதிரைலாயத்தில் கிடக்கும் கருப்பு குதிரையின் பிடரி மயிர் உதிர்வதை கூட கவனிக்க தவறாத ஒளரங்க சீப்பின் கண்களும் காதுகளும் இதை அறியவில்லையா?  இதை எப்படி நம்ப?
    இங்கு நான் குறிப்பிட்டது எதுவும் ஆதாரமற்ற குற்றாசட்டுகள் அல்ல. டாக்கா பல்கலைகழக முன்னாள் துனைவேந்தர் பேராசியர் கே.சி. மஹும்தார்,  கல்கத்தா பல்கலைகழக முன்னாள் வரலாற்று பேராசியர் ஹச் .சி. ராய் சௌத்ரி, பாட்னா கல்லூரியின் முன்னாள் வரலாற்று பேராசியர் கே. தத்தா ஆகியோர் எழுதிய இந்தியாவின் சிறப்பு வரலாறு என்ற நூலில் உள்ளது. இந்த நூலை தமிழ் வடிவம் படுத்தியது கோவை அரசினர் கலைகல்லூரியின் முன்னாள் வரலாற்று பேராசியர் எ. உஸ்மான் ஷெரிப் தமிழ்நாடு அரசால் 1965-ம் வருடம் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் நூலகங்களில் தேடி படித்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

பார்த்தவர்கள்

மொழி மாற்றம்

- Copyright © Do You Know...? -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -