- Back to Home »
- விந்தைமனிதன் »
- Mutharaiyar
Posted by : ஆனந்த் சதாசிவம்
Saturday, January 28, 2012
முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
முத்தரையரின் தோற்றுவாய்
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[1], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக்குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.
தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.
திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்
இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி - எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த குகைக்கோயிலைப் புதுப்பித்து அதன் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கிய செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகள் வழங்கிய செய்தி தெரியவருகிறது.
good
ReplyDelete