Archive for April 2012

பாசக்கயிறு வீசும் மர்மத்தீவு!



 மனிதர்களை கொல்லும் மர்ம தீவு :

 திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரிஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது. மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.

 கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று என்வைட்டினெட். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் Ôதிரும்ப வராது என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது. முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

 வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும்.

 அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர். பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும்.

Sunday, April 29, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்

நமக்கு ஏன் வயதாகிறது?



`இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும்’ என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும்.
அதாவது, ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்லச் செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது. ஆக, பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்கு காரணம் நமக்கு வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான்!
ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?
இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை.
ஆனால், `நான் கண்டுபிடித்துவிட்டேன்’ என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர்.
நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புரதங்கள் இருக்கிறது. `ELLP’ என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள். நியூக்ளியசிற்கு உள்ளேயும், நியூக்ளியசிலிருந்து வெளியேயும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த ணிலிலிறி புரதங்கள்தான். இதனால் இவற்றுக்கு `போக்குவரத்து வழித்தட புரதங்கள்’ என்று மற்றொரு பெயரும் உண்டு.
முக்கியமாக, நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த புரதங்களே. உடலின் பிற புரதங்கள் சேதமடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும். ஆனால், வேதியியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதமடையும்போது அவற்றுக்கு மாற்றாக, புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, பல நச்சுப்பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப்பொருளான DNAவை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்படைகின்றன என்று கண்டறிந்துள்ளனர் மார்ட்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.
பொதுவாக, உடலிலுள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயலிழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம். உதாரணமாக, எலிகளின் உடலிலுள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்ட்டின் ஹெட்சர்.
இத்தகைய விசேஷ பண்புடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்படைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.
மூப்படைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்படைதலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்படைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப்பொருட்கள் சென்று உள்ளிருக்கும் DNAவை சேதப்படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றமடைகின்றன என்று ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்படைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி. இந்த பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதி நிலை (internal stability) பாதிக்கப்படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
ஆய்வாளர் மார்ட்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில், (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதமடைவதே காரணமாக இருக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நியூரான்கள் தவிர்த்த உடலிலுள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும்போது அவை, அவற்றின் சேதமடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒருமுறை சேதமடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது துரதிஷ்டவசமானது.
`என்றும் பதினாறு’ மார்க்கண்டேயனைப் பற்றி படித்திருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும்போது, ஒருவேளை மார்க்கண்டேயனின் ELLP புரதங்கள் அவனுடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதமடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது!

Thursday, April 26, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்

"அனுமான்" போன்ற உயிரி அவதானிக்கப்பட்டுள்ளது




இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) ஆங்கிலத்தில் ape-like creature அல்லது நேபாள வழக்கில் yeti அல்லது மேகாலய வழக்கில் mande barung என்று அழைக்கப்படும் உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Posted by ஆனந்த் சதாசிவம்

காஃபியின் கதை



காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.

எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன.

அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதிகளை உட்கொண்டு உற்சாகமாக இருந்ததால், மோக்கா எனப்படுகிறது. அது தற்போது காஃபியுடன் தவிர்க்க இயலாத சொல்லாகி விட்டது. 'கஃபே கேன்ஸ்' எனப்படும் காஃபிக் கடைகள் முதன்முதலில் புனித நகரமான மெக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அரேபியா நாட்டின் சதுரங்கம் விளையாடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எப்போதுமே மகிழ்ச்சியில் களைக்கட்டி கொண்டிருக்கும் பிரபலமான இடங்களில் காஃபியின் இனிமை வேகமாக பரவியதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காஃபி விற்பனையாகும் கடைகள் புது வளர்ச்சியும், தனித்தன்மையையும் அடைந்தன.

அதன்பிறகு டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாடுகளின் காலனிகளின் மூலமும் மற்ற இடங்களுக்கும் காஃபியின் மகத்துவம் பரவ ஆரம்பித்தது. 1683 ஆம் ஆண்டு வெனிஸ் நகரின் பிரபல பியாசா சான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில்தான் முதன்முதலாக ஈரோப்பியன் காஃபி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அந்த இடம் காஃபிக்கு பெயர்பெற்ற இடமாகவே உள்ளது.

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு சந்தையான, லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனமே ஒரு காஃபி கடையாகவே முதலில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1688 ஆம் ஆண்டு எட்வர்ட் லாயிட்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யும் கப்பல்களின் பட்டியல்களை தயாரிப்பது இவரது பணியாகும். 1668 ஆம் ஆண்டில் தான் தென் அமெரிக்க மக்களால் காஃபி சுவைக்கப்பட்டது.

1773 ஆம் ஆண்டு போஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன் எனப்படும் காஃபி அவுஸில்தான் திட்டமிடப்பட்டது. இன்று நிதி மாவட்டம் என்றழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள காஃபி கடைகளில்தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும், பேங்க் ஆஃப் நியூயார்க்கும் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

1720 - ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தென் அமெரிக்காவில் காஃபி பயிரிடப்பட்ட நிகழ்ச்சி, காஃபி வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். 60 வேறுபட்ட நாடுகளில், பெரும்பாலும் வளரும் நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்பட்டாலும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் காஃபி அதிகளவில் அருந்தப்படுகிறது.

காஃபியை மிக அதிகமாக தயாரிக்கும் நாடு பிரேசில், காஃபிக்கு மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா. காஃபியின் தலைசிறந்த ஆறு தயாரிப்பாளர்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 
Wednesday, April 25, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்

உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு


உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு என சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இங்கு நஞ்சு என்று சொல்ல வருவது விவசாயிகள் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கும் பூச்சிமருந்துகள் (insecticide), பூஞ்சண கொல்லிகள் (Fungicide) பற்றியல்ல. இது இயற்கையாகவே உருளைக்கிழங்கு மற்றும் அதனோடு இணைந்த குடும்பத்தை சேர்ந்த தாவரங்களான தக்காளி, கத்தரி, புகையிலை போன்ற தாவர இனங்கள் தம்மை தாக்கும் பூச்சி பீடைகளில் இருந்தும் நோயை ஏற்படுத்தும் பூஞ்சண இனங்களில் இருந்தும் பாதுகாத்துகொள்ள உருவாக்கும் இயற்கையான பாதுகாப்புச்செயன்முறை.

உருளைகிழங்கு தாவரம் தன்னை பாதுக்காக்க உருவாக்கும் நச்சு பதார்த்ததின் பெயர் சொலானின் (Solanine) எனும் ஒரு கிளைக்கோஅல்கலோயிட்(Glycoalkaloid).

மனிதருக்கு நோயை ஏற்படுத்த மிகச்சிறிய அளவு சொலானின் போதுமானது. 2-5 மில்லிகிராம்/கிலோகிராம் உடல் நிறை எனும் அளவு சொலானின் மனிதரில் நோய் ஏற்படுத்த போதுமானது.
மிக அதிக அளவில் உள்ளெடுக்கப்பட்டால் மரணமும் சம்பவிக்கலாம்.

சொலானினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்: சமிபாட்டு தொகுதி, நரம்பு தொகுதி.

நோய் அரும்பு காலம்: 8-12 மணி நேரம். சில நேரங்களில் 30 நிமிடத்தில் கூட அறிகுறிகள் வெளித்தெரியலாம்.

அறிகுறிகள்:
மயக்கம், அல்லது nausea
வயிற்று போக்கு- diarrhea,
வாந்தி- vomiting,
வயிற்று உபாதை- stomach cramps,
தொண்டை எரிவு- burning of the throat,
heart arrhythmia,
தலைவலி -headache
dizziness


உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் போது சொலானின் அதிக அளவில் உருவாகிறது. இது இயற்கையாக மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு மண்ணுக்கு வெளியே கொண்டுவரப்படும் போது கிழங்கை உண்ணும் பூச்சிகள், நோய் ஏற்படுத்தும் பூஞ்சணங்களை எதிர்க்க உருளைகிழங்கு மேற்கொள்ளும் வழிமுறை. அத்துடன் பூஞ்சண தொற்று நோய்கள் உருளை கிழங்கு பயிரையோ அல்லது உருளை கிழங்கையோ தாக்கும் போது சொலானின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

எப்படி நாம் சொலானின் நச்சுபொருள் இருக்கும் உருளை கிழங்கை அறிவது:

பொதுவாக உருளைகிழங்கு சூரிய ஒளிக்கு, அல்லது மின் விளக்கு ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் பொது அதன் மேற்பரப்பு பச்சை நிறமாக மாறும். இது சாதாரணமாக இலைகள், தண்டுகள் போன்றவை கொண்டுள்ள பச்சயம் (chlorophyll) எனும் ஒளித்தொகுப்பிற்கு (photosynthesis) உதவும் ஒரு நஞ்சற்ற, ஒரு பதார்த்தம். பச்சயம் (chlorophyll) உருவாகும் செயன்முறைக்கு சமாந்தரமாக சொலானின் எனும் நஞ்சு பொருள் உருவாக்கமும் நடைபெறும். ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்த செயன்முறையல்ல. உருளைகிழங்கு அதிக அளவில் பச்சை நிறமாக இருக்கிறது என்றால் அங்கு சொலானின் என்ற நச்சு பொருளும் அதிக அளவில் இருக்க்கிறது என்றே அர்த்தமாகும். அத்துடன் சொலானின் கொண்ட உருளை கிழங்கு கசப்புச்சுவையை கொடுக்கும். அதே போல உருளை கிழங்கு முளைக்க ஆரம்பிக்கும் போதும் சொலானின் அளவு அதிகரிக்கும்.

சொலானின் நச்சுபொருள் பொதுவாக நீரில் அவிக்கும் போது அழிவடையாது உருளைகிழங்கில் இருக்கும். எனவே சமைத்த உருளைகிழங்கு கூட பாதுகாப்பானதல்ல.
முழுமையாக எண்ணேயில் மூழ்க செய்து பொரிக்கும் முறையில் சொலானின் அளவு குறைவடையலாம்.

சொலானின் உள்ள உருளை கிழங்கை எப்படி சமைப்பது?

உருளை கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்த பின் உருளை கிழங்கை அவதானித்து பார்க்கவும்.

உருளை கிழங்கு பச்சை நிறமாக இருந்தால் பச்சை நிறம் எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவு பகுதியினுடைய மேல் தோல், மற்றும் கிழங்கின் உள்ளே பச்சை நிறம் பரவியிருக்க கூடிய பகுதிகள் அனைத்தையும் வெட்டி அகற்றி பின் சமைக்கவும்.


ஒவ்வாமை (allergy) இருப்பவர்கள் இப்படியான பச்சை நிறமான உருளை கிழங்கை சமைப்பதை தவிர்ப்பது நல்லது.

வீடுகளில் உருளை கிழங்கை ஒளிபடாது பாதுகாத்துவைப்பது அவசியம்.

பூசண தொற்று ஏற்பட்ட உருளை கிழங்கை சமைப்பதை தவிர்த்தல்: சில நேரம் பூசண தொற்று ஏற்பட்டு அழுகிய பகுதியை வெட்டி அகற்றி மிகுதியை சமைப்பவர்கள் அதை முழுமைக்க தவிர்க்க வேண்டும்.

முளைத்த/ முளைஅரும்பிய உருளைகிழங்கை சமைப்பதை தவிர்த்தல்
Posted by ஆனந்த் சதாசிவம்

பாம்பு பால் குடிக்குமா?



 பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.


பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.


பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.


பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.


பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.


பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.


பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.



மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

புரூஸ் லீ

புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட மார்ஷியல் ஆர்ட்ஸின் முடிசூடா மன்னனான புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் பிரான்ஸிஸ்கோவில் பிறந்தாலும் வளர்ந்தது ஹாங்காங். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.


தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம்.
புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள் என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 பிரேம்களாக மாற்றியமைத்தனர்.

இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர்.
பெற்றோருடன் குழந்தையாக புரூஸ் லீ

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் ‘லீ ஜுன்பேன்’ என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை ‘ஜுன் பேன்’ சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959 ஆம் ஆண்டு, ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் அந்த நபரை புரூஸ் லீ கடுமையாக தாக்கிவிட சிக்கல் பெரிதானது. புரூஸ்லீயின் நலன் கருதி அவரது பெற்றோரும், அமெரிக்காவில் இருக்கும் தனது பால்ய நண்பர் வீட்டிற்கு அவரை அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் நிகழ்கையில் அவருக்கு வயது 18.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது ‘Batman’ படத்தின் தயாரிப்பாளர் William Dozier பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ‘The Green Hornet’, ‘Iron Side’, ‘Here Come the Brides’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,’Crawn Colony Cha Cha’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘பிக் பாஸ்’ படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இவர் யூனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன் என்ற கல்வி நிறுவனத்தில் சினிமா துறைக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்தார். இந்த கல்லூரியில் தான் தனது வாழ்க்கை துணைவியான லின்டா எமரியை சந்தித்தார். இவர்களுக்கு 1964 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு பிராண்டன் லீ என்ற மகனும், ஷெனான் லீ மகளும் பிறந்தார்கள். இருவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் பிராண்டன் லீ, 1993 ஆம் ஆண்டு தி க்ரோ படத்தில் நடிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

 
Posted Image
மனைவி மற்றும் குழந்தைகளுடன்



லீ தி லிட்டின் டிராகன் என்ற புனைப்பெயரும் இயக்குநர் ஒருவரால் இவருக்கு வழங்கப்பட்டது. சைனீஸ் ராசிப்பலன்படி புரூஸ் பிறந்தது டிராகன் ஆண்டு. அதனால் என்னவோ அவருக்கு அந்த பெயர் மிகவும் பொருந்திவிட்டது.

1972-ல் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.

புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய ‘Way to the Dragon’ படம் ‘பிஸ்ட் ஆஃப் பியூரி’ வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை ‘ரிடர்ன் ஆஃப் தி டிராகன்’ எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ‘Way to the Dragon’ படத்தின் கிளைமாக்ஸில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் ‘என்டர் தி ட்ராகன்’. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி “என்டர் தி டிராகன்” படத்திற்கு பின்னணி குரல் (Dubbing) பதிவு நடந்துகொண்டிருக்கும்போது உடம்பில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஜூலை மாதம் 20 ஆம் தேதி புரூஸ் லீயும் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ஜார்ஜ் லெசன்பையும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதனால் அதுகுறித்த கதை விவாதத்திலும் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் “கேம் ஆஃப் டெத்” படத்தின் தயாரிப்பாளர் ரேமண்ட் சௌவ்வுடன் பிற்பகல் 2 மணிவரை புரூஸ்லீ இருந்ததாகவும், 4 மணிக்கு மேல் சக நடிகரான பெட்டி திங் பெய் வீட்டுக்கு புரூஸ் லீ சென்றதாகவும் புரூஸ் லீயின் மனைவி கூறி இருக்கிறார். அப்போது புருஸ் லீக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் சக நடிகரான பெட்டி திங் பெய் அவருக்கு வலி நிவாரணி மருத்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து சரியாக 7.30 மணிக்கு ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு தூங்குவதற்கு சென்ற புரூஸ் லீ, மீண்டும் எழாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், அதற்குமுன் அவரை பிழைக்க வைக்க முயற்சி செய்ததாக மருத்துவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே புரூஸ் லீயின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இறுதியில், அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், கண்களில் தென்படும்படி அவரது உடலில் எந்த காயங்களும் இல்லையென்றும், ஆனால் அவரது மூளையின் அளவு மட்டும் 13 சதவீதம் பெரிதாகி இருந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்..

ஆனால் அவரை போட்டியாக நினைக்கும் சிலர் அவருக்கு உணவில் நஞ்சு கலந்துகொடுத்திருக்கிருக்கல�
�ம் என்றும் கூறப்படுகிறது.

இன்றுவரை இளைஞர்களது ஆதர்ஷ நாயகனான புரூஸ் லீ நடித்தது வெறும் 5 படங்கள் மட்டுமே.
உலத்தையே புரட்டிப்போட்ட அந்தப் படங்கள்

என்டர் த டிராகன்
த பிக் பாஸ்
ரிட்டர்ன் ஆப் த டிராகன்
பிஸ்ட் ஆப் பியூரி
Way of the dragan.
புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

முப்பது வயதிலேயே புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன் சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும் சாதாரணம்.

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.





ஹாங்காங்கில் உள்ள அவரது சிலை

ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில் அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை

Posted by ஆனந்த் சதாசிவம்

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை


“கொல்லைக்குப் போயிட்டு வரேன்!”


“போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!”


என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும் “ரெஸ்ட் ரூம்” சமாசாரம்.


வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன.


பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒதுங்கினால், டிரைவர் ஹார்ன் அடித்து, இன்ச் இன்சாக பஸ்ஸை நகர்த்தி பூச்சாண்டி காமிப்பார். “ஆனது ஆச்சு, இதோ வந்திடுவார்,” என்று பதறும் உங்களுக்கு வயிற்றை கலக்க ஆரம்பிக்கும்.


பதினைந்து வருடங்கள் முன் அமெரிக்கா சென்றபோது டாய்லட் பேப்பர் அறிமுகம் கிடைத்தது. காலில் நியூஸ் பேப்பர் பட்டாலே சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளும் நமக்கு, பேப்பரில் துடைத்துப் போட உடனே மனம் இடம்கொடுக்காது. ஆனாலும், சில நாள்களில் பிட்சாவுடன் கோக் போல இதுவும் பழகிவிடும்.


ரயிலில் போகும்போது ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு போனால் நிச்சயம் சொம்புடன் குந்திக்கொண்டு இருப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். சொம்பு இல்லை என்றால் பக்கத்தில் ஏதாவது சின்ன வாய்க்கால் இருக்கும். இலவச இணைப்பாக வயல்கள் பசுமையாக இருக்கும்; இயற்கை உரம்!


ரயிலுக்கு வெளியே பரவாயில்லை ஆனால் ரயிலுக்கு உள்ளே இருக்கும் டாய்லெட் பற்றி சொன்னால் அடுத்தவேளை சாப்பாடு பிடிக்காது. அப்படியே அர்ஜண்டாக ஒரு கை பாத்துவிடலாம் என்று உள்ளே சென்றால் ஒரு கையில் டிரஸை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் ஏதையாவது சப்போர்ட்டுக்கு பிடித்துக்கொண்டு, ஆடிக்கொண்டே ஓடும் ரயிலில், வெளியிலிருந்து கதவு தட்டப்படும் அடுத்தவரின் அவசரத்தில், தூக்கிப் பிடித்தால் மட்டுமே (சிலசமயம் மட்டுமே) தண்ணீர் வரும் குழாயில், சங்கிலியில் கட்டப்பட்ட டம்பளர் என்ற கழிவறைகளில்… ஆக்டோபஸுக்கே சவால்விடும் சாகசத்தை பொதுஜனம் சமாளித்து வந்திருக்கிறது; வருகிறது.


“இந்தியா ஒரு திறந்தவெளிக் கழிவறை” என்று பெயர்வாங்கிவிட்டதால் மற்ற நாடுகளைப் ஒரு சுற்று பார்த்துவிட்டு வரலாம் வாங்க.


டாய்லெட் சிலருக்குப் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. ஐந்தாம் சார்லஸ் என்ற ரோம் அரசர் பிறந்தது ஒரு டாய்லெட்டில். ஒரு சிலருக்கு இறப்பிடமாகவும் இருந்திருக்கிறது. எல்விஸ் என்றவர் டாய்லெட்டில் இறந்து போனார்.


கி.முவில் தொடங்கி நேற்று வரை டாய்லெட் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. கழிவை அகற்றுவதும் மறைப்பதும் மனிதனுக்கு இந்த விண்வெளி யுகத்திலும் பெரிய சவாலாக இருந்துக்கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கழிவுகளைப் பானையில் சேகரித்து அதை ஜன்னல் வழியே வெளியே போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை சகஜமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் என்று நினைக்க வேண்டாம் – ஐரோப்பாவில்! இந்த பழக்கத்தால் காலரா போன்ற தொற்றுநோய் பரவ டாய்லெட் உருவானது.


இயற்கை அழைத்தால் அரசனோ ஆண்டியோ உடையை ஏற்ற வேண்டும், அல்லது தாழ்த்த வேண்டும். வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது சமூக ஏற்றத்தாழ்வுகள் டாய்லெட்டிலும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.


நாகரீகம் தோன்றிய காலத்தில் முதலில் எழுத்துகள் தோன்றியது என்பார்கள். எழுத்துக்கு முன்பே டாய்லெட் தோன்றிவிட்டது. பாதாளச் சாக்கடை என்று நாம் இன்றும் உபயோகப்படுத்திக்கொண்டு போன பட்ஜெட்டில் கணக்கு காண்பித்துகொண்டு இருக்கும் ஒன்று ஏதோ சில நூற்றாண்டுகள் முன் வந்தது கிடையாது. மெசபடோமியா, சிந்து நாகரிகம் காலத்திலேயே இருந்திருக்கிறது. ஹபுபா கேபிர் (habuba kabir) என்ற இடத்தில் (தற்போது சிரியா) கழிவு நீரைக் கொண்டுசெல்ல பாதாளக் குழாயை உபயோகப்படுத்தியுள்ளார்கள். இந்தியர்கள் உபயோகித்த தண்ணீரைக் கொண்டு கழிவுகளைச் சுத்தம் செய்துள்ளார்கள். இது எல்லாம் கிமு 3300ல்!


சுமேரியர்கள் மெசபடோமியா ஆண்ட காலத்தில் சார்கான் (Sargon) என்ற அரசன் ஆறு கழிவறைகளைக் கட்டி தான் ஒரு “சுத்தமான” வீரன் என்று நிரூபித்தான். இதற்கு முன் இவர்கள் பானையின் மீது குந்திக்கொண்டு அதை செய்துக்கொண்டு இருந்தார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர்கள் என்னதான் வீரனாக இருந்தாலும் பானையின் மீது சில சமயம் குறி தவறிவிடுவதும் உண்டு. அதனால் குதிரைலாடம் போல இருக்கை செய்து அதற்குக் கீழே பானையை வைத்தார்கள். எழுத்தும், கழிவறையும் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தாலும், நியூஸ் பேப்பர் கண்டு பிடித்த பிறகு இவை இரண்டும் பாத்ரூமில் ஒன்று சேர்ந்தன!


சிந்துவெளி நாகரீகத்தில் மெசபடோமியாவைப் போலவே இருந்திருக்கிறது. ஹரப்பா மக்களின் வீடுகளிலிருந்து கழிவு நீர் செங்கலால் கட்டப்பட்ட செப்டிக் டேங்க் போன்ற ஒன்றில் கலந்தது. துர்நாற்றம் வராமல் இருக்க மூடினார்கள். பல நாடுகளிலும் இது போன்ற அமைப்பு தான் இன்னும் இருக்கிறது என்பது பெரிய ஆச்சர்யம்!


தற்போது நாம் உபயோகப்படுத்தும் ஃபிளஷ் டாய்லெட் கிமு கண்டுபிடிப்பு!. மினோவன் (Minoans) நாகரிகத்தில், 1,400 அறைகள், ஓவியங்கள், படிக்கட்டுகள் என்று அமர்களமாக நோசொஸ் அரண்மனையைக் கட்டிய மினோவன் ராஜா கூடவே ஃபிளஷ் டாய்லெட்டையும் கட்டினான்! மழைத் தண்ணீரை அரண்மனைக் கூரை மீது ஒரு தட்டில் சேகரித்து அதைக் கூம்பு போல இருக்கும் டெராகோட்டா பானையில் செலுத்தி இந்த ஃபிளஷுக்கு தண்ணீர் சப்ளை செய்தான். கூம்பு போல இருப்பதால் தண்ணீர் மெதுவாக வரும். வீணாகாது! அந்தக் காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு, சிக்கனம்!


சிந்துசமவெளி நாகரீகம் முதல் தற்போது ஜப்பானின் ஹைடெக் டாய்லெட் வரை எல்லாமே மனிதனின் கற்பனைத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.


பத்து ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணியில் சில தெருக்களில் சென்றால் சாலையில் இரண்டு பக்கமும் பாண்டி விளையாடிக்கொண்டு போக வேண்டும். ஐந்து மணிக்கு பால் வாங்க போனால் பெரியம்மா “ரோடு சைடுல பார்த்து போ ——— இருக்கும்” . (…. என்பது கடவுளின் பெயர் ).


பழைய காலத்திலும் கழிவுகளை கடவுளாக கொண்ட அதிசயங்களும் இருந்திருக்கிறது. யூதர்கள் கழிவுகளைக் குவித்து அதை தெய்வம் என்று வணங்கினார்கள். கார்பரேஷன் வண்டி இல்லாத அந்தக் காலத்தில் இந்தக் குவியல் மேடாகி மலையானது. தெய்வ சிந்தனை போய் தெய்வ நிந்தனை ஆகியது. கிறுத்துவர்கள் யூதர்கள் சாத்தானைத் தொழுகிறார்கள் என்று நினைத்தார்கள். குவியலிலிருந்த துர்நாற்றத்தை சுவாசித்தால் மூக்கு வழியாக சாத்தான் உடலுக்குள் போவதாக பயந்தார்கள்.


ஹீப்ரூ நாட்டில் கழிவுகளின் கடவுளாக பெல்பெகார் (Belphegor) திகழ்ந்தார். பக்தர்கள் தங்களுடைய பேண்டைக் கழட்டிவிட்டுச் சாமி முன் காலைக்கடனை நேர்த்திக்கடனாகக் கழித்தார்கள்.


ரோமில் சாமிகளுக்குப் பஞ்சம் இல்லை. எல்லாவற்றிருக்கும் கடவுள் இருந்தார்கள். பூமிக்கு கடவுள்; பாதாள கடவுள்; வீரத்துக்கு, காதலுக்கு… என்று அந்த பெரிய லிஸ்டில் மலத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘கொலசினா’ சாக்கடைக் கடவுள். சாக்கடை அடைப்பு, அல்லது அது நிரம்பி வழிந்தது என்றால் இந்தக் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்களாம். கடவுளை பிளம்பர் என்று நினைத்துவிட்டார்கள். நாம் இன்று ஆயுத பூஜை அன்று கடப்பாறை, கத்தி, சுத்தி, ஸ்பேனர், ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏன் கம்ப்யூட்டரையும் கடவுள் ஆக்கிவிட்டோம்.


சில நூற்றாண்டுகளுக்கு கிரேக்க மக்கள் நாம் இன்று உபயோகப்படுத்தும் பெட் பேன் மாதிரி ‘சேம்பர் பாட்’ என்ற ஒன்றை உபயோகித்தார்கள். அடிக்கடி ரூமுக்குப் போய்வருவது அவர்களுக்கு போர் அடித்ததோ என்னவோ, அந்த ‘சேம்பர் பாட்’டைத் தங்கள் உடைக்குள் வைத்துக்கொண்டார்கள்; பார்ட்டிக்கும், பயணத்துக்கும் பலவித டிசைன்களில்!
Posted Image

கிரேக்கத் தாக்கம் ரோம் நகரைச் சென்று அடைந்தது விரிவடைந்தது. அங்கேயும் ‘சேம்பர் பாட்’ கலாச்சாரம் விரிவடைந்தது. கொஞ்சம் நாளில் ரோம் நகரில் கழிவு நீர் குழாய் வந்தது – கொலாகா மேக்ஸிமா (Cloaca Maxima). கூவம் போல நதியில் கலந்தது. கழிவு நீர் குழாய் பக்கம் வீடுகள் வரத் தொடங்கியது. ஆனால் வீட்டுச் சாக்கடையை இதில் சேர்க்க எல்லோருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. சில முக்கியஸ்தவர்களுக்கு மட்டும் தான் பர்மிட் கிடைத்தது. பர்மிட் கிடைக்காதவர்கள் பொதுக் கழிப்பிடங்களுக்குச் சென்றார்கள். சென்றவர்கள் சும்மா ‘இருக்க’ முடியவில்லை. கிசுகிசு, அரசியல் ஏன் சில சமயம் பிஸினஸ் கூட பேசிமுடித்தார்கள். ஜாலியான மூடில் பார்ட்டிகள் நடத்தினார்களாம்!


இந்தப் பொதுக் கழிப்படச் சுவற்றில் மக்கள் கிறுக்காமல் இருக்க சாமி படங்கள் வரையப்பட்டது. இன்றும் சென்னையில் சர்ச், மசூதி, கோயில் என்று தேசிய ஒருமைப்பாட்டை வலியுத்தும் படங்களைப் பார்க்கலாம். கிபி 315ல் ரோமில் செய்ததை இன்று நம் ஊரில் செய்துக்கொண்டு இருக்கிறோம்! ஜெயநகர் ஷாப்பிங் காம்பிளக்ஸில் “யூரின் – 100ரூபாய்” என்று சுவரில் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தருவார்களா அல்லது நாம் அவர்களுக்கு தரவேண்டுமா என்று தெரியவில்லை.


குப்பைத் தொட்டி இருந்தாலும் குப்பையை பால்கனியிலிருந்து வீசும் பழக்கம் போல, சாக்கடை இருந்தாலும் சேம்பர் பானைகளில் சிறுநீர் கழித்து அதை ஜன்னல் வழியே போடுவதை யாரும் நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு வெளியே பாதிக்கபட்டவர்கள் மருத்துவ உதவி கேட்டு கோர்ட் கேஸ் என்று கூடப் போனார்கள். சிறுநீர் சலவைக்கு உபயோகிக்கலாம் என்று தெரிந்த பின் ஜன்னல் வழியே கொட்டும் பழக்கம் நின்றது.


சிறுநீரில் 85% தண்ணீர், 2% யூரியா, கால்சியம், அமோனியம் போன்றவை இருப்பதால் எண்ணெய்க் கறைகளைச் சிறுநீர் அகற்றியது. சலவைத் தொழில் செய்தவர்கள் எல்லோர் வீட்டு முன்பும் சிறுநீர் நிரப்பிக் கொடுக்கத் தங்கள் சொந்த செலவில் பானைகளை வைத்தார்கள்! அட, இது எப்படி இலவசம் என்று அரசர் அதற்கு வரி விதித்தார் என்பது வேறு கதை.


ரோம் போல இங்கிலாந்திலும் ஜன்னல் வழியே தூக்கி போடும் பழக்கம் இருந்த்துள்ளது. லண்டன் பாலத்தை ஒட்டிய வீடுகளில் டாய்லெட் கட்டபட்டதால் பாலத்துக்கு அடியில், தேம்ஸ் நதியில் தேமே என்று சென்றவர்களுக்கு இலவச மாலாபிஷேகம் நடந்தது. புத்திசாலிகள் பாலத்துக்கு மேலே சென்றார்கள், முட்டாள்கள் அடியில் சென்றார்கள். ஆண்டரு ஜோன்ஸ் என்பவர் தொல்பொருள் ஆராய்ச்சி செய்த போது 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த வைகிங் இனத்தவரின் மலத்தைக் கண்டு பிடித்துள்ளார். அதை $34,000க்கு இன்ஷ்யூர் வேறு செய்திருக்கிறார்! அந்த காலத்தில் நிறைய நார் சத்து சாப்பிட்டிருப்பார்கள் போல.
ஜெர்மனியின் கோட்டைகளில் கார்டிரோப்ஸ் (Garderobes)
Posted Image
இருந்தது. மூன்று அடிக்கு மூன்று அடியில் சின்ன ரூம்; சின்ன கல் சீட், சின்ன ஓட்டை! ரயிலில் அடியில் போகும் இங்கே கோட்டைச் சுவருக்கு வெளியே விழும். அவ்வளவு தான் வித்தியாசம். இந்த மூன்றுக்கு மூன்று அறை கிச்சன் பக்கம் இருந்ததாம். உட்காரும் போது குளிர் காலத்தில் இதமாக இருக்க வேண்டாமா? ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு நாற்றம் கோட்டை ஜன்னல் வழியே வரத்தொடங்கியது. மூன்றாம் ஹென்றி கோட்டைச் சுவற்றில் பழுப்பு நிறக் கறை படிந்ததால் வருத்தப்பட்டு, குழாய் போல ஒன்றைக் கட்டினான்.


சுவற்றில் இருந்த ஓட்டையினால் இந்த மாதிரி நன்மைகள் இருந்தாலும், போர்க் காலங்களில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தது. இந்த ஓட்டையின் வழியே சிப்பாய்கள் மூக்கை மூடிக்கொண்டு உள்ளே நுழைந்து தாக்கினார்கள். முடியாதவர்கள் ஓட்டையில் குறி பார்த்து அம்பு விட்டார்கள். மேலே சென்ற அம்பு எதையாவது அடித்ததா என்ற மேலதிகக் குறிப்பு இல்லை.


16-ஆம் நூற்றாண்டில் பீங்கான் கண்டுபிடிப்புக்குப் பிறகு நிலைமை மாறியது. பீங்கான் பல டிசைன்களில் வந்தது. ஜெட்டிக்குள் வைப்பதற்கு பதில் மக்கள் அதை மூடிய மர ஸ்டூல் உள்ளே வைத்தார்கள். ஸ்டுல் டெஸ்ட் என்று இன்று நாம் சொல்லுவதற்கு இது காரணமாகக் கூட இருக்கலாம்.


17-ஆம் நூற்றாண்டில் இந்த மூடிய ஸ்டூல் பிரபலமாகியது. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் குப்பையை ஏதாவது கலர் துணி போட்டு மூடுவது போல, பலர் மூடிய ஸ்டூல் முன்பகுதியில் புத்தகம் அடுக்கியமாதிரியும், ஓவியங்களைப் போட்டும் உள்ளே இருக்கும் சமாசாரங்களை மறைத்தார்கள். பணக்கார ராஜாக்களும் பிரபுக்களும் தங்கம், வெள்ளியில் பறவை, மிருக படங்களைப் பொறித்தார்கள். ரொம்ப நேரம் உட்கார விரும்புகிறவர்கள் சீட்டுக்கு லெதர் குஷன் செய்தார்கள். பதினான்காம் லூயி பல வெளிநாட்டுப் பிரமுகர்களை இந்த மூடிய ஸ்டூல் மீது உட்கார்ந்துகொண்டு வரவேற்றார். வந்தவர்களுக்குச் சிறப்பு சலுகையாக இது இருந்திருக்கலாம். லூயி அந்த அரியணையில் உட்கார்ந்துக்கொண்டு பிஸினஸ் வேறு பேசினாராம்.


பதினெட்டாம் நூற்றாண்டில் பீங்கான் கழிவறைகள் வர தொடங்கியது. புது டைரியில் எழுத மனசு வராதமாதிரி அதை உபயோகிக்க மக்களுக்கு மனசு வரவில்லை. இந்த நூற்றாண்டில் மேலும் பல சுவாரசியமான கதைகள் இருக்கின்றன. அவை வேறு ஒரு சமயம். இப்போது இருபத்தோராம் நூற்றண்டுக்குத் தாவலாம்.
Posted Image

டிவி ரிமோட், காபி மிஷின், ஸ்டிரியோ என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். எல்லாவற்றையும் எலக்டரானிக் விஷயமாக ஆக்கும் ஜப்பானியர்கள் டாய்லெட்டையும் விட்டு வைக்கவில்லை. 38 பட்டன் கொண்ட வயர்லெஸ் டாய்லெட் எல்லாம் வந்துவிட்டது. ஒரு பட்டனைத் தட்டினால் டாய்லெட் சீட் முதலில் கொஞ்சம் சூடாகி நமக்கு இதமாக்கும். சின்ன சத்தம் போட்டு முதலில் சுத்தம் செய்யும். கடைசியில் இன்னொரு முறை சுத்தம் செய்யும். பிறகு வெந்நீர் கொண்டு அலம்பிவிடும். சூடான காற்று பின்புறத்தைக் காய வைக்கும். டாய்லெட் பேப்பர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலே செல்பவர்கள் ‘அது’ வந்தால் என்ன செவார்கள்? என்பதைப் பற்றியும் சில ஆச்சரியமான தகவல் இருக்கிறது.


1961ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை வைத்து முதல் ராக்கெட்டை அனுப்பியது. அதில் பயணம் செய்தவர் ஆலன் ஷெப்பர்ட்; வெறும் 15 நிமிடப் பயணம். இந்தப் பயணத்துக்காக ஆலன் தொடர்ந்து நான்கு மாதம் அழுத்தம் கொண்ட உடையை அணிந்து தன்னை பழக்கிக்கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தது. இவர் பயணம் செய்த அன்று இயற்கை கொஞ்சம் விளையாடியது. மேக மூட்டம் காரணமாகவும், பிளைட்டில் ஏதோ சின்ன கோளாறு காரணமாகவும் புறப்பட நான்கு மணி நேரம் தாமதம் ஆனது. கிளம்பும் சமயம் இயற்கை அவரை அழைத்தது! கண்டரோல் ரூமுக்குச் “அவசரமா… ” என்று செய்தி அனுப்பினார். அவர் அணிந்துள்ள சூட்டில் பல கருவிகளைப் பொருத்தியுள்ளார்கள். திரும்பவும் எல்லாவற்றையும் எடுத்து மாட்டினால் தாமதம் ஆகும் என்ற காரணத்தால் என்ன செய்ய என்று குழம்பினார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள் – சூட் உள்ளேயே சிறுநீர் போய்விடுங்கள் என்று ஆணை வந்தது! அவர் சூட்டில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூட்டினுள் வெப்பம் அதிகமானால் உடனே உள்ளே பொருத்தியிருக்கும் சென்ஸார் அதைக் கண்டுபிடுத்து ஃபிரியான் (freon) என்னும் குளிர்விப்பான் ரிலீஸ் ஆகி வெப்பத்தைத் தணிக்கும். இவர் சூட்டினுள் சிறுநீர் கழித்தால் வெப்பம் அதிகமாகும் பிறகு ஃபிரியான் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கை. அதே போல் ஆனது. ஆனால் ஒரு சின்னப் பிரச்சினை கூடவே வந்தது. சூட்டினுள் இருந்த சிறுநீர் வெந்நீராக மெதுவாக அவர் தலையை நோக்கி வர ஆரம்பித்தது!. அலனுக்கு பீதி. எங்கே மேலே வந்து இணைப்புக் கம்பிகளைத் தொட்டு மின்கசிவு ஏற்பட்டு ஷாக் அடித்து விடுமோ என்று. நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் நோக்கி வந்த சிறுநீர் அவர் முதுகுப்பக்கம் தங்கிவிட்டது!.


1984ல் விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டில் சிறுநீர் வெளியேற்றும் கருவி பழுதடைந்து பின் ஐஸ் கட்டியாகிவிட்டது. ராக்கெட் திரும்ப வரும்போது இந்த மூத்திர ஐஸ் மீது மோதி ராக்கெட்டுக்கு வெளிப்புறம் இருக்கும் சென்சார்களுக்கு ஏதாவது ஆகிவிட கூடாது என்று ராக்கெட்டில் இருந்த ரோபட்டை கொண்டு அதை மூத்திர ஐஸை உடைத்த கதைகளும் இருக்கிறது.


எதுக்கு இந்த பிரச்சனை எல்லாம் என்று ஜப்பான் விண்வெளி ஏஜன்சி நம் குழந்தைகள் உபயோகப்படுத்தும் டயப்பர் போல ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். கொஞ்சம் ஹைடெக். டாய்லெட் போக வேண்டும் போல இருந்தால் இந்த டயப்பரில் இருக்கும் சென்சார்கள் (உணர்கருவி) அதை அறிந்துக்கொண்டு உறிஞ்சிவிடுமாம். இன்னும் ஆச்சரியம் இருக்கு, முடித்தபிறகு அதுவே கழுவி, காயவைத்தும் விடுமாம். அது மட்டும் இல்லை கொஞ்சம் வாசனை வந்தால் அதையும் எடுத்துவிடுவதால், “ராவணா படம் என்னிக்கி ரிலீஸ்?” என்று பேசிக்கொண்டே நீங்களும் சத்தம் போடாமல் “ரிலீஸ் செய்யலாம்” யாருக்கும் தெரியாது.


நாசா விண்வெளி ஆராய்ச்சியில் இது மாதிரி ஹைடெக் எல்லாம் இல்லை. ஆணுறை போல ஒன்றை டாய்லெட் வரும்போது பொருத்திக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு ரப்பர்க் குழாய் ராக்கெட் வெளியே விடப்பட்டிருக்கும். மாட்டிக்கொண்டவர் வால்வை ஜாக்கிரதையாகத் திறக்க வேண்டும். ரொம்பத் திறந்தால் பிரஷர் காரணமாக சிறுநீரையும், அந்தச் சிறு உறுப்பையும் வெளியே இழுத்துவிடும் அபாயம் இருக்கிறது. புவிஈர்ப்பு அற்றநிலை (Zero Gravity) காரணமாக பொருத்திய கருவி ‘படக்’ என்று கழன்றுவிழுந்து சின்னச் சின்னதாக மிதக்க. கூட இருப்பவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்!.
Posted Image


இது இப்படி இன்றால் ‘நம்பர் 2′ இன்னும் மோசம். குப்பைத்தொட்டிக்குப் போடும் பை போன்ற ஒன்றை நிறைய டேப் வைத்துப் பின்புறம் ஒட்ட வைத்து பிறகு ரிலீஸ் செய்ய வேண்டும். இதிலும் புவிஈர்ப்பு அற்றநிலையில் நிலையில்.. உங்களுக்கே புரிந்திருக்கும். அப்போலோ 7ல் பயணம் செய்தவர்கள், “Get naked, allow an hour, have plenty of tissues ready” என்று தங்கள் அனுபவத்தை எழுதியுள்ளார்கள்.


நாசாவும் சில ஹைடெக் சமாசாரங்களை செய்துள்ளது. 2008ல் அமெரிக்கா நாசா திட்டத்தில் $250 மில்லியன் டாய்லெட் ஆராய்ச்சிக்கு ஒதுக்கியது. சிறுநீரைச் சுத்தம் செய்து தண்ணீர் ஆக்கியது! அது மட்டும் இல்லை வேர்வை, ஈர டவலில் இருக்கும் தண்ணிரைக் கூட குடிதண்ணீர் ஆக்கியது. இந்தத் தண்ணீர் கிளப் சோடா (club soda) மாதிரி இருக்குமாம். கப்பு சோடா இல்லை! இந்தக் குடிதண்ணீர், நம் குழாயில் வரும் தண்ணீரை விட சுத்தமாக இருக்குமாம். $250 மில்லியன் காஸ்ட்லி தண்ணீர் ஆச்சே!
Posted Image

கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று! வின்வெளிக் கப்பல்களில் இடப்பற்றாகுறை எப்போதும் இருக்கும். அதனால் தேவையில்லாத வஸ்துக்களை வெளியே போட்டுவிடுவார்கள். சிறுநீரை வெளியே கொட்டியவுடன் சின்னச் சின்ன ஐஸ் கட்டிகளாகிவிடும். சூரியன் மேலேபடும்போதெல்லாம் ஜொலிக்க ஆரம்பிக்கும். பிறகு நீராவியாகும். அவசியம் பார்க்க வேண்டிய காட்சி என்று மேலே ‘போனவர்கள்’ சொல்லுகிறார்கள்.


இந்த விஷயங்கள் இணையத்தில் இருக்கிறது. பல வரலாற்றுத் தகவல்கள் “The Porcelain God” என்ற புத்தகத்தில் இருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தை பாதிதான் படித்தேன். முழுவதும் படித்து முடிக்க ஆசை தான் ஆனால் ”பாத்ரூம் போனவர் ஏன் இன்னும் வெளியே வரவில்லை?” என்று தேடுவார்கள்.


இந்தக் கட்டுரையை எழுதியபின் பூமித்தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்கு நன்றி
Posted by ஆனந்த் சதாசிவம்

பிரசித்தி பெற்றவை

பார்த்தவர்கள்

மொழி மாற்றம்

- Copyright © Do You Know...? -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -